90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என இரு வேறு தலைமுறையினருக்கு பாலமாக அமைந்து இன்றைய காலகட்டத்துகான இசை இளவரசனாக உருவெடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
கிளாசிக் உணர்வையும் புதுமை சுவையையும் ஒருசேர ரசனை மாறாமல் தரக் கூடிய இசையமைப்பாளர் ஜிவி. ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பாடி ரசிகர்களுக்கு அறிமுகமான அவருக்கு இசை முன்பிருந்தே அறிமுகம் தான்.
முறையாக லண்டன் சென்று இசை பயின்று வந்த ஜிவி, ஏ.எல் விஜயோடு அமைத்த கூட்டணியில் ”பொய் சொல்ல போறோம்”, ”மதராசப்பட்டினம்”, ”தெய்வத்திருமகள்”, ”தாண்டவம்”, ”தலைவா”, ”சைவம்” ஆகிய படங்களில் மெலடிகளால் மனதை வருடி, வெற்றிமாறனுடன் இணைந்து “ஆடுகளம்” “விசாரணை” “அசுரன்” ஆகிய படங்களில் அடித்து துவம்சம் செய்யும் கோபம், வேட்கை, உரிமை தேடல் ஆகிய ஆழமான உணர்வுகளை இசையால் இழைத்து காதுகளை கலங்கடித்தார்.
இது போதாதென நடிப்பு வேணுமா அதுவும் இருக்கு என ‘டார்லிங்’ படத்தில் நடிக்க தொடங்கி ரசிகர்களின் கண்களுக்கும் விருந்து படைத்தார். “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”“புருஸ்லீ” “கடவுள் இருக்கான் குமாரு” ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற கமெர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கி ‘நாச்சியார்’ ‘சர்வம் தாளம் மயம்’ போன்ற கருத்தாழமிக்க படங்களிலும் நடித்து நடிகராகவும் நிரூபித்து காட்டியுள்ள ஜிவி இன்று தனது 36வது பிறந்தநாளை காண்கிறார்.
அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ படத்தில் நடித்து வரும் அவரை வாழ்த்தும் வகையில் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட, திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.