Monday, December 29, 2025

தடுப்பு சுவரால் தான் விபத்துகள் நடக்கின்றன – லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில் விபத்து தடுப்பு தொடர்பாக மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் தேசிய நெடுஞ்சாலைகளின் மையதடுப்பு சுவரின் உயரம் குறைவாக இருப்பதாலேயே பெரும்பாலான விபத்துகள் நடப்பதாகவும், அவற்றின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதுதவிர, சுங்கச்சாவடிகளை விழாக்காலங்களில் நெரிசலின்றி வைப்பது, உரிய பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் கூறப்பட்டுள்ளன.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர் சங்கம் தலைவர் யுவராஜ், “தேசிய நெடுஞ்சாலைகளின் மைய தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என ஆணியத்திடம் மனு கொடுத்துள்ளோம்.

நாட்டில் 52% விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளால் தான் நடக்கின்றன. சமீபத்தில் கடலூரில் நடந்த விபத்தில் அப்பாவிகள் 9 பேர் உயிரிழந்தனர். வாகனம் ஒன்று மையத்தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த வாகனத்தின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைத்திடம் 10 வருடங்களுக்கு முன்னரே புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலைகளில் ஜீரோ விபத்து என பலகை வைத்தால் மட்டும் விபத்துகள் குறையாது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தன்னிச்சையாகவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளின் மையத்தில் இருக்கும் தடுப்பு சுவர்களின் அளவை உயர்த்த வேண்டும். சாலையின் மைய சுவற்றில் மோதும் வாகனங்கள் டயர் வெடித்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதவிர விழாக்களிங்களில் சுங்கச்சாவடிகளை 2, 3 நாட்களுக்கு முன்பே நெரிசலின்றி வைக்க வேண்டும். மேலும், வாகனங்களுக்கு உரிய பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது” என தெரிவித்தார்.

Related News

Latest News