Sunday, December 7, 2025

1000 ஆண்டு சாபம்? பிரமிடு-க்குள் அலறவிடும் அமானுஷ்யங்கள்!

உலகம் முழுவதும் வியப்புடன் பார்க்கப்படும் பிரமிடுகளின் நாடான எகிப்து, மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அருங்காட்சியகன் ஒன்று அங்கு திறக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘பார்வோனின் சாபம்’ குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள எகிப்து தனது பிரமாண்டமான பிரமிடுகள், மம்மிகள் மற்றும் புதையல்களால் உலகப் புகழ் பெற்றது. அவற்றை காட்சிப்படுத்தும் நோக்கில் எகிப்தியன் அருங்காட்சியகம் கெய்ரோ நகரில் திறக்கப்பட்டுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகள் முயற்சிக்கு பின் ஒரு பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டு கடந்த நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டது.

அங்கு எகிப்து மன்னர் துட்டன்காமுனின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் “பார்வோனின் சாபம்” என்ற பழமையான நம்பிக்கை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நம்பிக்கைக்கு துவக்கம் 1922ம் ஆண்டு. அப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்டர் மற்றும் அவரது ஆதரவாளர் ஜார்ஜ் ஹெர்பர்ட், எகிப்தின் “மன்னர்களின் பள்ளத்தாக்கில்” துட்டன்காமுனின் கல்லறையைத் திறந்தனர். அதில் தங்கம், நகைகள், தேர்கள், மேலும் புகழ்பெற்ற தங்க மரண மாஸ்க் கண்டெடுக்கப்பட்டன.

ஆனால் அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே ஹெர்பர்ட் மரணமடைந்ததும், அதே சமயம் கெய்ரோவில் மின்தடையும், அவரது செல்லப்பிராணியின் திடீர் மரணமும் நடந்தன. இதனால் பார்வோனின் சாபம் உண்மையோ என்ற சந்தேகம் எழுந்தது.

இப்போது அந்த மன்னர் பொருட்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், எகிப்தின் மர்மமும், அதன் சாபக் கதையும் மீண்டும் உலகின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது. ஆனாலும் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இந்த சாபம் உண்மையென்பதை உறுதிப்படுத்தவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News