தற்போது ரீ-ரிலீஸ்களின் காலம் என்று சொல்லும் அளவிற்கு பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படமான ‘அண்ணாமலை’ ரீ-ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படம், 1992-ல் வெளியானது. இந்த திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரஜினிகாந்த், குஷ்பு, சரத் பாபு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, பிரபாகர், வினு சக்கரவர்த்தி, மனோரமா, வைஷ்ணவி என பலரும் நடித்து பெரும் வெற்றி பெற்றது. இப்படமானது, டிசம்பர் 12 அன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ‘அண்ணாமலை’ திரையரங்குகளுக்கு வருகிறது. இதே போன்று, கடந்த ஆண்டு, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆனது.
இந்திய சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த படம் ‘பாகுபலி’ பிரான்சைஸ் ஆகும். இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து, ராஜமௌலி ‘பாகுபலி: தி எபிக்’ என்கிற படத்தை நவம்பர் 2ந் தேதி ரிலீஸ் செய்திருந்தார்.
இதனால் படத்தின் நீளம் 3.45 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூல் வேட்டை ஆடியது. அதாவது, இந்தியாவில் மட்டுமல்ல, வெளியிடப்பட்ட மற்ற நாடுகளிலும். ‘பாகுபலி: தி எபிக்’ மொத்தம் 51 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
அண்ணாமலை திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
