அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மை காலமாக, உலக நாடுகள் மீது அதிக வரிகளை விதிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து டாலரை அழிக்க முயற்சிப்பதாக டிரம்ப் கருதுவதே முக்கிய காரணமாகும்.
இதற்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யா – உக்ரைன் போரினை நிறுத்திட, டிரம்ப் பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருகிறார். இதற்காக ரஷ்யாவுக்கு எதிரான வேலைகளை கையிலெடுத்து உள்ளார். அந்தவகையில் தற்போது ரஷ்யா மீது, அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதை டிரம்பும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில், ” புதின் நன்றாக பேசுகிறார். ஆனால் உக்ரைனுக்கு எதிரான போரினை அவர் நிறுத்துவது போல தெரியவில்லை. விரைவில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா வழங்க இருக்கிறது. நாங்கள் அதிநவீன ராணுவ ஆயுதங்களை அவர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
பதிலுக்கு அவர்கள் எங்களுக்கு 100 சதவீதம் பணமாக கொடுக்க இருக்கின்றனர். இது எங்களுக்கு நல்ல பிஸினஸாக இருக்கும். ,” என்று பேசியிருக்கிறார். பேட்டியின் போது ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்பதையும், டிரம்ப் சூசகமாக தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே ரஷ்யா, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டு வருகிறது.
மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணியை குறிவைத்து தடைகளை விதித்துள்ளன. இந்தியா மற்றும் சீனாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதன் மூலமாகவும், கஜகஸ்தான் போன்ற நாடுகள் வழியாக மேற்கத்திய நாடுகளில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்வதாலும் இந்த இழப்பை ரஷ்யா ஈடுகட்டி வருகிறது.
நிலைமை இப்படியிருக்க தன் பங்கிற்கு அமெரிக்கா, பொருளாதார தடையை கையில் எடுத்தால் அது ரஷ்யாவுக்கு பல்வேறு வழிகளிலும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தால் பதிலுக்கு ரஷ்யாவும், கடும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவாக இரு அணிகளாக பிரியும் சூழ்நிலை உருவாகக் கூடும். இது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதற்கு நடுவே இந்தியா, சீனா இரு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் தான், புதின் உக்ரைனுக்கு எதிரான போரினை தொடர்ந்து நடத்துகிறார் என்பது டிரம்பின் எண்ணமாக இருக்கிறது. இதனால் இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் அதிகளவு வரிகளை விதிக்க டிரம்ப் திட்டம் தீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.