திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர் நாகராஜன் என்பவர் கல்லூரி மாணவியிடம் பாலியல் விருப்பத்திற்கு உடன் படுமாறு செல்போனில் தொந்தரவு கொடுத்த நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறை இயங்கி வருகிறது. தமிழ் துறையின் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நாகராஜன் என்பவர், தமிழ்த்துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரிடம் செல்போனில் பாலியல் ரீதியாக தனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என பலமுறை தொந்தரவு செய்து பேசும் ஆடியோ பதிவு வைரலாகி உள்ளது.
இதனால் கல்லூரியில் பயிலும் மாணவிகளும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கணேசனிடம் கேட்டதற்கு மாணவியிடம் தமிழ் துறை பேராசிரியர் நாகராஜன் பேசிய குரல் பதிவு குறித்து எனது கவனத்திற்கு வந்தது. இதையடுத்து திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குனரிடமிருந்து கொடுக்கப்பட்ட அறிவுரையின் படி கல்லூரி உள்புகார் பாதுகாப்பு கமிட்டி மற்றும் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு என இரு விசாரணை நடைபெற்றுள்ளது.மேலும், ஆர்ஜே.டி நேரில் வந்து விசாரணை செய்ய இருக்கிறார். முதல் கட்ட விசாரணையில் தமிழ் துறை பேராசிரியரின் மீது உள்ள தவறு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் ரீதியான நோக்கத்துடன் தொந்தரவு செய்த பேராசிரியர் நாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.