AI தொழில்நுட்பம் உதவிக்கு மட்டும்; தீர்ப்புக்கு இல்லை… தலைமை நீதிபதி சூர்யகாந்த்!!

இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமைய முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற நீதித்துறை அதிகாரிகள் மாநில மாநாட்டில் பேசிய அவர், நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், நீதித்துறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றாலும், அதன் வரம்புகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். ஏஐ தொழில்நுட்பம் சட்ட ஆலோசனைகள் வழங்குதல், தரவுகளை திரட்டுதல் போன்ற துணை செயல்பாடுகளுக்கு உதவக்கூடும். ஆனால் அது எந்த நிலையிலும் மனித நீதிபதிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்றார்.

சிக்கலான வழக்குகளை விசாரிக்கும் போது, நீதிபதிகள் மேற்கொள்ளும் ஆழமான சிந்தனை, உணர்ச்சி, மற்றும் தீர்ப்புக்குப் பிறகு கிடைக்கும் மனநிறைவு போன்ற அம்சங்களை ஏஐ உணர முடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஏஐ ஏற்கனவே உள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இயல்பான பகுத்தறிவு, விவேகம் மற்றும் அனுபவம் போன்றவை அதற்கு இல்லை.

மேலும், ஒரு வழக்கை தீர்ப்பதில் அறநெறி, சமூக சூழல், மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் போன்ற பல நுணுக்கங்களை மனிதர்கள் கருத்தில் கொள்வார்கள். உணர்ச்சியற்ற ஏஐக்கு இந்த அம்சங்களை முழுமையாக புரிந்து கொள்ள இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஆனால் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை அதற்கு ஒப்படைக்கக் கூடாது என்று சூர்யகாந்த் வலியுறுத்தினார்.

Related News

Latest News