Friday, August 22, 2025
HTML tutorial

சொந்தச் செலவில் 22 குளங்களைத் தூய்மைசெய்த ஆசிரியர்

கர்நாடக மாநிலம், மைசூரிலுள்ள கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வரும் டாக்டர் ராகவேந்திரா தனது சொந்த சேமிப்பிலிருந்து செலவு செய்து நான்கு ஏரிகள், பத்துக் குளங்கள் உள்பட மொத்தம் 22 பழமையான நீர்நிலைகளைத் தூய்மை செய்துள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.

தினமும் காலையில் ஜாக்கிங் செல்வது டாக்டர் ராகவேந்திராவின் பழக்கம். அவ்வாறு சென்றபோது ஜாக்கிங் செல்லும் வழியில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் போன்றவைப் பராமரிப்பின்றி செடிகொடிகள் படர்ந்து புதர்போல் கிடப்பதைப் பார்த்தார். அருகில் சென்று கவனித்தபோது குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்பட்டு குப்பை மேடாகக் காட்சியளித்தது.

இதனால் அவராகவே 2016 ஆம் ஆண்டு அவற்றை சுத்தம் செய்யத் தொடங்கினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதிபெற்று உள்ளூர்வாசிகள், மாணவர்களை இணைத்துக்கொண்டு பணியைத் தொடங்கினார்.

2020 ஆம் ஆண்டு முடிவில் 22 நீர்நிலைகளை சுத்தம் செய்துவிட்டார். தற்போது புத்தம் புதிதாகக் காட்சியளிக்கும் அவற்றில் தண்ணீர் பெருகிவருகிறது. அவற்றின்மூலம் பல்லாயிரத்துக்கும் அதிகமானோர் பயனடையத் தொடங்கியுள்ளனர். குடிநீர், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வருகின்றன அந்த 22 நீர்நிலைகளும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News