டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளின் தாக்கத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில், வரும் ஏப்ரல் 1 முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பிற செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், அதன் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் வணிக வாகன விற்பனையில் முன்னிலை வகித்து வரும் டாடா மோட்டார்ஸ், வர்த்தக வாகனங்களின் மாடலைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்றும் தெரிவித்துள்ளது.
சுமார் 180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ.437.75 என்ற அளவில் வர்த்தகம் முடிவடைந்தன.
