தமிழக அரசு மதுபானக் கடைகளில் (TASMAC) விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை, காலி செய்த பிறகு மீண்டும் அதே கடைகளில் ஒப்படைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்த 10 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, திரும்பப் பெறப்படும் காலி பாட்டில்களில் 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டிக்கர்களை ஒட்டி, ஊழியர்களே அந்தப் பாட்டில்களைச் சேகரித்து, சுத்தம் செய்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
“பாட்டில்களைச் சேகரித்து பராமரிப்பது தங்களுக்கு கூடுதல் பணிச்சுமையை உருவாக்குவதோடு, சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது” என்பது ஊழியர்களின் வாதமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் காலி பாட்டில்களில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டன. இந்த ஸ்டிக்கர்களை ஒட்ட மாட்டோம் என மறுத்த திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், இன்று நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டனர்.
அங்கு திரண்ட ஊழியர்கள், தங்களிடம் வழங்கப்பட்ட ஸ்டிக்கர்களை மீண்டும் மாவட்ட மேலாளரிடமே நேரில் ஒப்படைத்தனர். இதனால் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சுமார் 146 அரசு மதுபானக் கடைகளை இன்று முதல் வருகின்ற 23-ம் தேதி வரை திறக்கப்போவதில்லை என ஊழியர்கள் சங்கத்தினர் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.
அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்று, காலி பாட்டில் சேகரிப்புப் பணியிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை இத்திட்டத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
