Wednesday, January 7, 2026

பக்கத்துல வந்தாலே போதும், அடுத்த நொடியில் உங்க பணம் காலி., அதிர்ச்சி தரும் புது மோசடி

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாகியுள்ளன. அதே நேரத்தில், ஆன்லைன் பண மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் புதிய புதிய முறைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில், சமீபகாலமாக ‘டேப் அண்ட் பே’ (Tap and Pay) என்ற புதிய மோசடி அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் NFC (Near Field Communication) தொழில்நுட்பம் உள்ளது. இந்த வசதி மூலம், சிறிய தொகைப் பரிவர்த்தனைகளுக்கு கார்டை ஸ்வைப் செய்யவோ அல்லது PIN எண்ணை உள்ளிடவோ தேவையில்லை. POS இயந்திரத்தின் அருகில் கார்டை கொண்டு சென்றாலே பணம் தானாகவே பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த வசதியை தவறாக பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மால்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சந்தைகள் போன்ற கூட்டம் அதிகம் உள்ள இடங்களை குறிவைக்கின்றனர். சிறிய POS இயந்திரத்தை கையில் அல்லது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பர்ஸ் வைத்திருக்கும் நபர்களை நெருங்குகிறார்கள். அந்த இயந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை உள்ளிட்டு, அதை பர்ஸ் அல்லது பாக்கெட்டிற்கு மிக அருகில் கொண்டு சென்றவுடன், NFC தொழில்நுட்பத்தின் மூலம் 2 முதல் 3 விநாடிகளில் பணம் எடுக்கப்பட்டுவிடுகிறது. பெரும்பாலான நேரங்களில், மொபைலில் தகவல் வரும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் தெரியாது.

இந்த ‘டேப் அண்ட் பே’ மோசடியில் இருந்து பாதுகாப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். உங்கள் வங்கியின் மொபைல் ஆப் அல்லது இணைய வங்கி சேவையின் மூலம் Contactless Payment அல்லது NFC வசதியை முடக்கலாம். அல்லது, இந்த வசதிக்கு ரூ.500 அல்லது ரூ.1,000 போன்ற குறைந்த வரம்பை நிர்ணயிக்கலாம். மேலும், ரேடியோ அலைவரிசைகளைத் தடுக்கும் சிறப்பு கார்டு ஹோல்டர்கள் மற்றும் வாலட்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் கார்டை வெளிப்புற சாதனங்கள் ஸ்கேன் செய்ய முடியாது.

இதுபோன்ற மோசடியில் சிக்கினால், பதற்றப்படாமல் உடனடியாக உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்புகொண்டு கார்டை முடக்க வேண்டும். பின்னர் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம். அல்லது 1930 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து புகாரை பதிவு செய்யலாம். விரைவாக புகார் அளித்தால், இழந்த பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

Related News

Latest News