நாடு முழுவதும் ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை வலுப்பதாக எண்ணப்பட்ட நிலையில் முன்னதாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜவின் வெற்றியை கணித்தன.
ஆனால், அதையும் தாண்டி அபார வெற்றியை குஜராத்தில் உறுதி செய்துள்ளது பாஜக. குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிலான வெற்றி பாஜகவுக்கு சாத்தியமானதற்கு இரண்டு முக்கிய வியூகங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் 40 சதவீதத்திற்கு மேலாக பட்டிதார் மற்றும் தாக்கூர் சாதியை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பட்டிதார் வகுப்பை சேர்ந்த ஹர்திக் படேல் மற்றும் தாக்கூர் வகுப்பை சேர்ந்த அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறியதும், குஜராத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.
‘நான் நரேந்திரன்.. நீங்கள் தேவேந்திரர்’ என முன்னதாக பிரதமர் மோடி குறிப்பிட்டது தமிழகத்தில் உள்ள தேவேந்திர குள வேளாளர்களின் வாக்கை குறிவைத்து பேசப்பட்டதாக அப்போதே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
அப்படியாக, அந்த வகுப்பை சேர்ந்த அனைவரின் வாக்கையும் பெறும் கட்சியால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெற முடியும். சாதிக்கு அடுத்தபடியாக பாஜக இலவச வாக்குறுதிகளை நம்பியே களமிறங்கியது.
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு kindergarten முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், குறைந்த விலையில் சன்னா, குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் என இலவசங்களை வாரி குவித்து மாநிலத்தை தன்வசமாக்கியுள்ளது பாஜக.
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று சென்னையில் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் லோக்சபா தேர்தல், பூத் கமிட்டி உருவாக்கம், கூட்டணி அமைப்பது போன்ற விவரங்கள் குறித்து ஆலோசனை செய்யபட உள்ளதாக கூறப்படும் நிலையில் 2024 தேர்தலில் பாஜக தமிழ்நாட்டை கைப்பற்றும் யுக்திகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.