நடப்பாண்டின் இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை Hurun india வெளியிட்டுள்ளது. இதில், 2025 ஆம் ஆண்டில் ரூ.2,708 கோடி நன்கொடை வழங்கி HCL குழும நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார்.
சரி, யாரு இந்த HCL குழும நிறுவனர் ஷிவ் நாடார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவ் நாடார். இவர், 1945 ஜூலை 14ஆம் தேதி பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 78 வயதாகிறது. இவரது பெற்றோர் பெயர் சிவசுப்பிரமணிய நாடார், வாமசுந்தரி தேவி. மதுரை பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.
பின்னர் கோவை PSG கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படித்தார். இந்த நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டிய ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து 1976ஆம் ஆண்டு டெல்லியில் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) என்ற நிறுவனத்தை ஷிவ் நாடார் தொடங்கினார்
இவருடன் 7 பேர் ஒன்று சேர்ந்து HCL நிறுவனத்தை தொடங்கியிருந்தனர்.சாப்ட்வேர் இல்லாமல் எந்த ஒரு டிஜிட்டல் கருவிகளும் இயங்காது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான சந்தை என்பது மிகப்பெரியதாகும், ஆகையால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கிளைகளை திறக்க HCL நிறுவனம் முடிவு செய்தனர்.
தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது அங்கீகாரத்தை பதிவு செய்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மட்டுமின்றி, சமூக சேவையிலும் ஷிவ் நாடாருக்கு ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.
அதாவது, 1994ல் HCL பவுண்டேஷனை தொடங்கினார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டது.
குறிப்பாக கல்விக்காக ஏராளமாக அள்ளிக்கொடுத்தார். பல கல்வி நிறுவனங்களை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்காக நன்கொடை வழங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.

குறிப்பாக தனது வருமானத்தில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என்பது தான் ஷிவ் நாடாரின் எண்ணம்.
அதாவது, இதை தன் குடும்பம் கஷ்டப்படும் நிலையில் இருந்த போது, தன்னுடைய அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாக ஒருமுறை ஷிவ் நாடார் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், தற்போது வயது மூப்பு காரணமாக பல்வேறு பணிகளில் இருந்து ஒதுங்கி கொண்டதாகவும், இவரது மகள் ரோஷினி நாடார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்கு ஷிவ் நாடார் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
அதாவது, கடந்த 5 ஆண்டுகளில், 4 ஆண்டுகளில் ஷிவ் நாடாரே இதில் முதலிடம் வகித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டை விட 26% அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார்.
இந்த பட்டியலில், ரூ.626 கோடிகளுடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 2வது இடத்தில் உள்ளார். அடுத்தபடியாக, 3வது இடத்தில் ரூ.446 கோடிகளுடன் பஜாஜ் குழுமம், 4வது இடத்தில் ரூ.440 கோடிகளுடன் குமார மங்கலம் பிர்லா குழுமம், 5வது இடத்தில் ரூ.386 கோடிகளுடன் கௌதம் அதானி 5வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் மொத்தம் 194 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், 12 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
