கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய கோழி மற்றும் மாட்டிறைச்சி வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கேரளா எல்லையோரமாக உள்ள 13 மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
3 முதல் 5 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல், சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரத்தப் பரிசோதனையில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
