நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் பொதுவாக ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. இவை அரசின் அதிகாரப்பூர்வ இல்லங்களாகவும், ஆளுநர்களின் குடியிருப்புகளாகவும் பயன்படுகின்றன. அதேபோல், யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை ஆளுநர்களின் மாளிகைகள் ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ‘ராஜ் பவன்’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, சென்னையில் உள்ள ராஜ் பவன் பெயரை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ராஜ்பவன்கள் இனி ‘லோக் பவன்’ எனவும், யூனியன் பிரதேசங்களில் உள்ள ராஜ் நிவாஸ் இனி ‘லோக் நிவாஸ்’ எனவும் மாற்றப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையின் பெயரும் ‘மக்கள் பவன்’ (லோக் பவன்) என மாற்றப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
