தமிழக அரசு புதிய உத்தரவு! கிராம உதவியாளர் பணியிடங்களில் சேர வயது உச்சவரம்பு தளர்வு!

தமிழகத்தில் கிராம உதவியாளர் நியமனம் தொடர்பாக புதிய உத்தரவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சுற்றறிக்கையில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், கிராம உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியாக SSLC நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் SSLC தகுதி இல்லாத, கல்வியில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் கூடுதல் ஐந்து ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய திருத்தத்தின் படி, பல்வேறு பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது:

பொது பிரிவு அதாவது OC, GD விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் DNC பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 39 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.சிறுபான்மை சமூகங்கள், அதாவது SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கான வயது வரம்பு 35 வயதிலிருந்து 42 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களிடையே நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கொரோனா காலத்தில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் அதனால் நியமனங்கள் தள்ளிப்போனதை கருத்தில் கொண்டு, நேரடி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பில் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் கிராம உதவியாளர் நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவில் வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News