தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் இனி தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்துள்ளார்.
ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற நடைமுறை தொடர்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்து வந்தன. குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்கூட, ஆளுநர் முன்னிலையில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதையடுத்து, 21 எம்.பிக்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதி, தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தச் சூழலில், இனி தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், ஆளுநர் பங்கேற்றாலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், தமிழ் என்பது வெறும் சொல் அல்ல; அது நமது உயிர் என்றும் வலியுறுத்தினார். “தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளத்தையும் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது.
