Wednesday, December 24, 2025

த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம்; நாளை இடம் மாற்றம் பரபரப்பு தகவல்!!

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,’உங்க விஜய் நான் வரேன், மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி உள்ளார்.

அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரம் பெரும்பாலும், சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2-கட்ட பிரசாரத்தை நாகையில் விஜய் {செப் 20 }நாளை மேற்கொள்கிறார். இதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆகிய உள்பட 7 இடங்களில் தமிழக வெற்றிக்கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்த
நிலையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் தொண்டர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புத்தூர் ரவுண்டானாவில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதியளித்த நிலையில், அண்ணா சிலை அருகே உரையாற்ற த.வெ.க.வினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். த.வெ.க.வினரின் கோரிக்கையை அடுத்து புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற காவல்துறை அனுமதி அளித்துள்ளது.அதாவது, புத்தூர் அண்ணா சிலைக்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என த.வெ.க.வினர் ஒப்புதல் அளித்தனர்.

Related News

Latest News