Friday, September 26, 2025

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம்!! எங்கெல்லாம் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13-ந் தேதி திருச்சி பிரச்சாரம் செய்தார். பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை பிரசாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டது. அதாவது, 3-வது கட்ட பிரசாரம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27-ந் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளாராம். விஜய் பேசுவதற்கு கரூரில் உள்ள கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில், வேலுச்சாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

இதற்காக காவல்துறை அனுமதி கேட்டு தவெக- வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று அல்லது நாளை கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.

விஜய் கரூர் வருகையை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய்க்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News