தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சி கொடியில் வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. கொடியின் நிறம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, மனுதாரர் சபை கொடியை த.வெ.க பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது எனவும் இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, த.வெ.க. கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போது, இந்த வழக்கு நீதிபதிகள், ஜி. ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.