Wednesday, December 17, 2025

யூ-டியூப் பார்த்து அறுவை சிகிச்சை., போலி டாக்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் வசித்து வந்தவர் முனிஷ்ரா ராவத். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயாவுக்கு சென்றுள்ளார். அங்கு கிளினிக்கின் உரிமையாளர்களாக ஞான பிரகாஷ் மிஷ்ரா மற்றும் விவேக் மிஷ்ரா இருந்துள்ளனர்.

ராவத்தை பரிசோதித்த பிரகாஷ், அவருக்கு சிறுநீரக கல் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் இதற்கு ரூ.25 ஆயிரம் ஆகும் என்று கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.20 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்த நாள், யூடியூப் வீடியோக்களை பார்த்துக்கொண்டே பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் போதையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதனால், ராவத்தின் வயிற்றுக்குள் உள்ள பல நரம்புகளை தவறாக வெட்டி, கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த நாளே, மிகுந்த வலி காரணமாக ராவத் அலறி துடித்தபடி உயிரிழந்தார். இதையடுத்து, கணவர் பதே பகதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு நடத்தி, ராவத்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். கிளினிக் உரிமையாளர்கள் ஞான பிரகாஷ் மற்றும் விவேக் மிஷ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் உரிமையாளர்கள் இருவரும் தப்பித்து சென்றதால் இன்னும் கைது செய்யவில்லை.

உத்தர பிரதேசத்தில், போலி டாக்டர் போதையில் யூ-டியூப் பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததில் பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News