விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46). இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில இவருக்கு கால் வலி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.
அதன்படி நேற்று மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்த போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது.
இதையடுத்து மாரிமுத்துவின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு டாக்டர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர். நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர்.