தமிழகத்தையே உலுக்கிய, திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், தற்போது ஒரு முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. வரதட்சணைக் கொடுமை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்த அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் என்ன? ஜாமீன் வழங்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்னென்ன கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன? விரிவாகப் பார்க்கலாம்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “ரிதன்யா திருமணத்திற்கு முன்பிருந்தே தற்கொலை மனநிலையில் இருந்திருக்கிறார். அவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. இங்கு வரதட்சணைக் கொடுமை எதுவும் நடைபெறவில்லை. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், காவல்துறை தரப்பு வழக்கறிஞர் இந்த ஜாமீனுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், “ரிதன்யாவின் ஆடியோ மெசேஜ் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். ரித்தன்யாவைத் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. மனுதாரர்கள் செல்வாக்கானவர்கள் என்பதால், ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது,” என்று சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கோட்டாட்சியர் (RDO) விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. முக்கிய சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்துவிட்டது. எனவே, இந்தச் சூழலில் மனுதாரர்களைத் தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று கூறி, மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எனினும், இது ஒரு சாதாரண ஜாமீன் அல்ல. பல கடுமையான நிபந்தனைகளுடன் தான் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள்:
அடுத்த உத்தரவு வரும் வரை, மூவரும் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்க எந்த வகையிலும் முயற்சிக்கக் கூடாது.
மூவரும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரண்டு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.தங்களது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது.
ஆக, இந்த ஜாமீன், வழக்கின் ஒரு முக்கியக் கட்டமே தவிர, தீர்ப்பு அல்ல. ரித்தன்யாவின் ஆடியோ மெசேஜ் குறித்த தடயவியல் ஆய்வு அறிக்கை வெளியான பிறகு, இந்த வழக்கு மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.