தமிழகம் முழுவதும் வெப்பம் கொளுத்தி வரும்நிலையில் குறிப்பாக இன்றும் நாளையும் தமிழகத்தில் வெயில் வாட்டியெடுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தாலும் வரும் 22, 23ம் தேதிகளில் சில இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தெற்கு வங்க கடலில் உருவாகும் சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் தென் மாவட்டங்களில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கனமழைக்கான வாய்ப்புகள் இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று அதாவது மார்ச் 21 முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “கீழடுக்கு சுழற்சி தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22, 23ம் தேதிகளில் சில இடங்களிலும் 24, 25ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. வரும் 26ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகப்பட்ச மழைப்பொழிவு தமிழகத்தில் மார்ச் 20ம் தேதி அதாவது நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமேயன்றி மழைக்கு வாய்ப்பில்லை. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகம் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பது, பொதுமக்களை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அதாவது, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருப்பது கவனம் பெறுகிறது.