அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த பயணம் உலக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் நடைபெறவுள்ள சந்திப்பு, அமெரிக்கா–சீனா உறவுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போருக்கு மத்தியில் இந்த பயணம் நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இந்த பயணத்தில் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிரம்ப் உடன் சென்றுள்ளனர். எலான் மஸ்க், டிம் குக் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெரிய நிறுவன தலைவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனாவுக்குள் நுழைந்த அமெரிக்க குழுவினருக்கு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களின் தனிப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் போன்ற சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக “க்ளீன்” எனப்படும் அடிப்படை வசதிகள் கொண்ட தற்காலிக சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சாதனங்கள் பயணத்திற்குப் பிறகு முழுமையாக ஆய்வு செய்யப்படும் அல்லது அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உளவு திறன் மற்றும் ஹேக்கிங் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது. ஹோட்டல் வைஃபை மற்றும் டிஜிட்டல் தொடர்புகள் கண்காணிக்கப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. இதனை சீனா மறுத்து, தங்களது தரவு பாதுகாப்பு சட்டங்கள் வலுவானவை என விளக்கம் அளித்துள்ளது.
