சென்னையின் முக்கிய பொதுப் போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மின்சார ரெயில் சேவை திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில்கள், மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக தற்காலிகமாக நடைமேடை 5 மற்றும் 6-க்கு மாற்றப்பட்டிருந்தன. மேலும், ரெயில் சேவைகளும் குறைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
மறுசீரமைப்பு பணிகள் ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்து வழக்கமான சேவை தொடங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. ஆனால், பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவடைந்ததால், இன்று முதல் மீண்டும் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக மின்சார ரெயில் சேவைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனால் புறநகர் ரெயில் சேவைகள் முழுமையாக மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பயணிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், பிப்ரவரி 20ஆம் தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்த வழக்கமான கால அட்டவணையும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வார நாட்களில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 106 ரெயில் சேவைகள் மற்றும் மறுமார்க்கமாக 106 சேவைகள் என மொத்தம் 212 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 93 சேவைகள் மற்றும் மறுமார்க்கமாக 97 சேவைகள் என மொத்தம் 190 ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், திட்டத்திற்கு முன்பே பணிகளை வெற்றிகரமாக முடித்த ரெயில்வே ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
