புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே அரசு பள்ளியில் கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நமணசமுத்திரம் அருகே தேக்காட்டூர் பகுதியில், நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் கலா ராணி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தது உண்மை என்பதும், பள்ளி தலைமை ஆசிரியை கலாவை பழிவாங்கும் நோக்கில் சமையலர் வீரம்மாள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாவை பணியிடை நீக்கம் மற்றும் உதவி ஆசிரியர் தினேஷ் ராஜாவை பணியிட மாறுதல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.