கோழிகள் மீது கண்மூடித்தனமான பாசம்! சிறை தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவி!

அமெரிக்காவில் கல்லூரி மாணவி ஒருவர், கோழிகள் மீது கொண்ட மிதமிஞ்சிய கருணையால் பிரச்சனையில் சிக்கியுள்ளார். மேலும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த 23 வயதான ஜோ ரோசன்பெர்க், ஒரு கால்நடை மருத்துவரின் மகள். சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பூனைகள், நாய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுடன் வளர்ந்த இவர், சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது பாசம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

விலங்கு நல அமைப்பில் பணியாற்றி வந்த ரோசன்பெர்க், 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தனது நண்பர்களுடன் சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகிலுள்ள பெட்டலுமா பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றுக்கு சென்றார். அங்கு பண்ணை ஊழியராக வேடமிட்டு, லாரியில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகளில் இருந்து நான்கு கோழிகளை வாளிகளில் மறைத்து வெளியே எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த கோழிகளுக்கு பெயர் வைத்து பரிசோதனைக்கு அனுப்பிய ரோசன்பெர்க், அவை கடுமையான காயங்கள், சிராய்ப்புகள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். இதை அடிப்படையாகக் கொண்டு, கோழி பண்ணைகளில் விலங்குகள் மீதான கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த பதிவுகள் பெரும் கவனம் பெற்றன. இதனால் கோழி பண்ணை நிர்வாகம், திருட்டு மற்றும் அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டில் ரோசன்பெர்க் மீது வழக்கு பதிவு செய்தது.

தற்போது வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரோசன்பெர்க் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்குப் புறப்படலாம் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். விலங்கு நலனுக்காக எடுத்த இவரது முயற்சி, தற்போது கடுமையான சட்டப் பிரச்சனையாக மாறியுள்ளது.

Related News

Latest News