Monday, December 1, 2025

வயிற்று புற்று நோய்..! இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க..!

மனிதர்களை தாக்கும் நோய்களிலேயே மிகவும் கொடிய நோய் என்றால், அது புற்றுநோய் தான். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் வயிற்றில், அதாவது இரைப்பையில் உள்ள செல்களில் வளரக்கூடிய அசாதாரண கட்டி தான் வயிற்றுப் புற்றுநோய்.

இந்த நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரண ஜீரண பிரச்சனைகளைப் போல் இருக்கும் என்பதால், பலரும் அதைக் கவனமின்றி விட்டுவிடுகிறார்கள். இதனால் நோய் தீவிரமான நிலையில் தான் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுகிறது.

வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்

தொடர்ந்த வயிற்று வலி

சில நாட்களாக காரணமின்றி வயிற்று வலி இருந்து வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மலத்தில் மாற்றங்கள்

மலத்தின் தன்மை, அளவு அல்லது நிறத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால், குறிப்பாக இரத்தம் கலந்தால், அது ஆபத்தான எச்சரிக்கை அறிகுறியாகும்.

எடை குறைவு

உடல் எடை திடீரென குறைந்து வருகிறதா? உடற்பயிற்சி அல்லது உணவு கட்டுப்பாடில்லாமல் எடை குறைந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

பசியின்மை

நீண்ட நாட்களாக பசி எடுக்காமல் இருந்தாலோ அல்லது வயிறு நிரம்பிய உணர்வு தொடர்ந்தால், இது பரிசோதிக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறி.

வயிற்று வீக்கம் அல்லது ஜீரணக் கோளாறு

வயிற்று பகுதியில் வீக்கம், அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

தொடர்ந்த நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் நீண்ட நாட்களாக தொடர்ந்தால், இது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

விழுங்குவதில் சிரமம்

உணவுக் குழாய் பாதிக்கப்பட்டிருந்தால், திட அல்லது திரவ உணவுகளை விழுங்கப் பிரச்சனை ஏற்படலாம். சில நேரங்களில் உணவு மீண்டும் மேலே வரும் உணர்வும் தோன்றலாம்.

நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கையாளும் விழிப்புணர்வும், உடனடி மருத்துவ பரிசோதனையும் உயிரைக் காப்பாற்றும் முக்கியமான வழி. வயிற்று சார்ந்த ஏதாவது சீரற்ற மாற்றங்கள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News