ஒரு பஸ்ஸில் பயணிக்க ஐந்நூறு ரூபாய் போதாத இந்த நாளில், அதே தொகைக்கு ஒரு விமான பயணம் கிடைக்கும் என்றால்… நம்ப இயலுமா?
ஆனால், இது கற்பனை அல்ல – வரவிருக்கும் புதிய விமான இருக்கை முறையின் காரணமாக, இது விரைவில் சாத்தியமாகி விடும்!
2026 முதல் ஐரோப்பாவில் இயங்கும் சில குறைந்த செலவுடைய விமான நிறுவனங்கள், பயணிகளை நின்றபடியே விமானத்தில் பறக்கச் செய்யும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க இருக்கின்றன.
இந்த புதிய வகை இருக்கைக்கு பெயர் ஸ்கைரைடர் 2.0.
இது இத்தாலியாவைச் சேர்ந்த Avio interiors என்ற நிறுவத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சைக்கிள் இருக்கையைப் போன்ற அமைப்புடன், பயணிகள் சுமார் 45 டிகிரி சாய்ந்த நிலைமையில் நின்றபடி ஓய்வெடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பிற்காக இடுப்புக் கட்டும் பெல்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகை இருக்கைகள் விமான பாதுகாப்புச் சட்டங்களை பூர்த்தி செய்து, அனைத்துவித சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வடிவமைப்பு, மிகக் குறைவான இடத்தை எடுத்துக்கொள்வதால், குறுகிய தூர விமானங்களில், 20 சதவீதம் வரை கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இவை எளிமையான வடிவமைப்புடன், குறைந்த எடையுடையதாகவும், பராமரிக்க எளிதாகவும் உள்ளதால், விமானங்களுக்கு இடையிலான நேரத்தையும் குறைக்க முடியும். இது நிறுவனங்களுக்குப் பெரும் நன்மையாக அமையும்.
பயணிகளுக்கும் இதனால் நன்மைதான் – இந்த வகை இருக்கைகள் வழக்கமான இருக்கைகளைவிடக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டில், ரியானேர் விமான நிறுவனத்தின் தலைவர்
மைக்கேல் ஓ’லியரி(Michael O’Leary), இந்த வகை நின்றபடி பயணிக்கும் இருக்கைகளை பயன்படுத்த 1 முதல் 5 பவுண்டுகள் வரை,அதாவது சுமார் 115 ரூபாயில் இருந்து 575 ரூபாய் வரை டிக்கெட்டுகளை வழங்கலாம் என்று முன்மொழிந்திருந்தார்.
இப்போது, ஸ்பெயினிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரையிலான பல நிறுவனங்கள் இதை செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
சில சிரமங்கள் இருந்தாலும், ரூ.500க்குள் விமானப் பயணம் என்றால் – மக்கள் தயங்காமல் “நிக்கலாம்!” என்பதே உண்மை.