இந்திய ரயில்வே அமைச்சகம், தற்போதுள்ள வந்தே பாரத் ரயில் சேவைகளை விட அதிக வேகத்தில் செல்லக்கூடிய 2 புதிய அதிநவீன ரயில்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் அதிவேக ரயில்களாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயில்கள், மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்போது நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் செயல்பட்டு வருகிறது.
2026 மார்ச் 23ஆம் தேதி, இந்திய ரயில்வே வாரியம், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)க்கு அனுப்பிய கடிதத்தில், 2027–28 ஆண்டிற்கான உற்பத்தித் திட்டத்தின் கீழ், தலா 16 பெட்டிகள் கொண்ட 2 புதிய ரயில் தொகுப்புகளை உருவாக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய ரயில்கள் மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்படும். ஆனால் அவற்றின் அதிகபட்ச செயல்பாட்டு வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆக இருக்கும்.
இந்த ரயில்கள் ‘பிராட் கேஜ்’ பாதையில் இயக்கப்படுவதுடன், எஃகு உடலமைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயில் தொகுப்பிலும் 16 பெட்டிகள் இடம்பெறும்.
2024 அக்டோபர் மாதத்தில், இந்த 2 அதிவேக ரயில் தொகுப்புகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிக்கான ஒப்பந்தத்தை பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை வழங்கியது.
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.866.87 கோடி. ஒரு ரயில் பெட்டியின் விலை சுமார் ரூ.27.86 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை செலவுகள் அடங்கும்.
