சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து ‘ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்’ செயல்படுத்த இருக்கின்றன.
முதற்கட்டமாக, அண்ணா நகரின் 25 கிலோ மீட்டர் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 2,000 கார்களும், 5,000 இருசக்கர வாகனங்களும் முறையாக நிறுத்தப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
சென்சார், கேமரா, மொபைல் செயலி மூலம் பார்க்கிங் இடங்களை நேரடி தகவலோடு கண்டறியும் ஏற்பாடுகள் உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு கார்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20, சரக்கு வாகனங்களுக்கு ரூ.60 கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்யும் வசதி, கட்டணத் தொகை ஆன்லைன்/யூபிஐ/ரொக்கமாக செலுத்தும் வசதி உள்ளது.
அண்ணாநகரில் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், சென்னை நகரின் மற்ற பகுதிகளும் விரிவாக்க திட்டத்தில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.