Friday, January 16, 2026

சென்னை போரூரில் பைனான்சியர் வீட்டில் கொள்ளையடித்த 6 பேர் கைது

சென்னை, போரூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வரும் இளவரசன் (36) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, 12ஆம் தேதி அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சென்னை திரும்பிய இளவரசன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 8 சவரன் தங்க நாணயங்கள், ஒரு தங்க காப்பு, ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், ஆப்பிள் செல்போன், கருங்காலி மாலை உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (25), செங்குன்றத்தைச் சேர்ந்த முரளி (24), புழலைச் சேர்ந்த டில்லிபாபு, அவரது மனைவி வாணி, அவரது தோழிகள் யுவஸ்ரீ மற்றும் ஆர்த்தி ஆகிய 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சூர்யா மீது ஏற்கனவே 57 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவரது தலைமையிலேயே இந்த கொள்ளை திட்டமிடப்பட்டு நடந்ததும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News