இந்தியர்கள் தங்க நகைகளை வாங்குவதன் முக்கிய காரணம், அவசரத் தேவை ஏற்பட்டால் உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றலாம் என்பதே. வேறு எந்த சொத்தையும் அரை மணி நேரத்தில் இவ்வளவு வேகமாக பணமாக்க முடியாது.
தற்போது வெள்ளியின் விலையும் தங்கத்துக்கு நிகராக வேகமாக உயர்கிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடமானமாக வைத்து கடன் பெறலாம் என்று அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும். இந்த அறிவிப்பு வெள்ளி சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதை செயல்படுத்தும். தங்கம் இல்லாதவர்கள் வெள்ளியை அடமானமாக வைத்து குறுகிய கால கடன் பெறலாம். இது வெள்ளி வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
கிராமப்புறங்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அதிகம் வாங்குகின்றனர். 2010-இலிருந்து 15 ஆண்டுகளில் 29,000 டன் வெள்ளி நகைகள், 4,000 டன் நாணயங்கள் விற்பனை நடந்துள்ளது.
RBI இதை வீடுகளில் குவிந்திருக்கும் வெள்ளியை வெளியே கொண்டு வந்து, முறையான கடன் அணுகலை விரிவாக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்துகிறது. தங்க விலை உச்சமடைந்த சூழலில், வெள்ளி ஒரு முக்கிய சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
