பிரான்சின் பாரிஸில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி, அந்த அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த துணிகரச் சம்பவத்தில், சுமார் 102 மில்லியன் டாலர் மதிப்பிலான அரச குடும்ப நகைகள் திருடப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்பட்ட Password மிகவும் பலவீனமானதாக இருந்ததாக தெரியவந்துள்ளது. அதிர்ச்சிகரமான, அந்த கடவுச்சொல் அருங்காட்சியகத்தின் பெயரான “லூவ்ரே” என்பதே என கூறப்படுகிறது. இது பாதுகாப்பு நெறிமுறைகளில் கடுமையான அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.
விசாரணைக்காக ஆஜரான லூவ்ரே அருங்காட்சியக இயக்குநர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ், அருங்காட்சியகத்தின் சில பகுதிகளில் போதுமான சிசிடிவி கேமராக்கள் இல்லாததும், திருடர்கள் நுழைந்த ஜன்னலை சரியாக கண்காணிக்காததும் தங்கள் தவறாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.
உலகின் மிகப் பிரபலமான கலை அருங்காட்சியகங்களில் ஒன்றான லூவ்ரேவில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டிருப்பது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியத்தையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
