வீடு என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான சொத்து. அந்த காலங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்த வீடு இருந்ததால், வீடு வாங்க கடன் எடுப்பது அரிதாக இருந்தது. ஆனால், நகரமயமாக்கல் அதிகரித்ததால், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர, வீடு என்பது முக்கிய தேவையாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் வாடகை வீட்டில் தங்கியவர்கள், மாதாந்திர வாடகை செலுத்துவதற்குப் பதிலாக, கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவது சிறந்ததாக கருதி செயல்படுகின்றனர். தற்போது நகர்ப்புறங்களில் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாய் முதலிலிருந்து வீடுகள் கிடைக்கின்றன. வீடு வாங்கும் முன், குறைந்தது 20% முன்பணம் செலுத்த வேண்டும். அதாவது, 30 லட்சம் ரூபாய் வீடு வாங்க, வாங்குபவர் 6 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்து, மீதமுள்ள 24 லட்சத்துக்கு வங்கிக் கடன் பெறுவார்.
10% வருட வட்டி விகிதத்தில், 20 ஆண்டுகள் செலுத்த வேண்டிய மாத தவணை சுமார் 23,161 ரூபாய் ஆகும். மொத்தத்தில், ரூபாய் 24 லட்சம் கடனுக்கு ரூபாய் 55 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும். இது கடினமாக தோன்றினாலும், 20 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 80 லட்சம் வரை உயரும். ஆனால், அப்போது கட்டுமானத் தரம் குறைந்து, சீரமைப்புக்கு மேலும் செலவாகும்.
இதற்குப் பதிலாக, அதே EMI தொகையை மியூச்சுவல் பண்ட் அல்லது SIP-இல் முதலீடு செய்தால், 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 1.25 கோடி வருவாய் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தப் பணத்தில் வீடு வாங்கலாம். ஆனால், அப்போது நகர மையத்தில் இல்லாமல், புறநகரப் பகுதிகளில் தான் வாங்க வேண்டியிருக்கும்.
அதனால், நிபுணர்கள், ‘முதலில் வீட்டை வாங்குவது பாதுகாப்பானது. ஆனால், EMI உங்கள் வருமானத்தின் 60% தாண்டக்கூடாது’ என அறிவுறுத்துகின்றனர்.