பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மீண்டும் ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வரும் Balochistan Republican Guards என்று அழைக்கப்படும் பலூச் விடுதலை இயக்கத்தினர், இந்த முறை ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிந்து–பலூசிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள சுல்தான்கோட் அருகே இந்த சம்பவம் ஏற்பட்டது. குவெட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு சென்றபோது, தண்டவாளத்தில் முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. சக்திவாய்ந்த வெடிப்பால் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. பல பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்துக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த மார்ச் மாதத்தில் இதே ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் இயக்கத்தினர் கடத்தி, சுமார் 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்திருந்தனர். அதன்பின் ரயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இவர்களின் நடவடிக்கைகள் பாகிஸ்தானில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பலூச் விடுதலை இயக்கத்தினர், ‘பலூசிஸ்தான் சுதந்திரம் அடையும் வரை இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடரும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், பலூசிஸ்தானில் நீடித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் உலக அரங்கில் கேள்விகள் எழும்பியுள்ளன.