அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஐபோனுக்கு பதிலாக குழந்தைகளுக்கான பாடிவாஷ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயபேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் கடந்த மாதம் 25ம் தேதி அமேசான் ஆப் மூலம் ஆன்லைனில் 53 ஆயிரத்து 100 ரூபாய் பணம் செலுத்தி, ஐபோன் ஆர்டர் செய்துள்ளார்.
அடுத்த நாள் டெலிவரி ஆகும் என தெரிவித்திருந்த நிலையில் ஒரு நாள் கழித்து தாமதமாக பார்சல் வீடு தேடி வந்துள்ளது. இதையடுத்து, டெலிவரி ஊழியர் முன்னிலையிலேயே பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஐபோனிற்கு பதிலாக குழந்தைகளுக்கான பாடிவாஷ் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பொருளை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், அந்நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான சுரேந்தர் கடந்த 6ம் தேதி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
