Sunday, December 22, 2024

வெட்கப்படும் காகம்!

காகத்தைப் பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும்.
காகத்தைத் தங்கள் முன்னோர்களாகக் கருதி பலர்
அதற்கு உணவு வைப்பதையும் பார்த்திருக்கிறோம்.

தனக்குக் கிடைக்கும் உணவை சக காகங்களையும்
அழைத்துப் பகிர்ந்துண்ணும் வழக்கத்தை உயர்ந்த
பண்பாகப் போற்றுகிறோம்…

காகம் பற்றி தெரிந்துகொள்ள நிறைய நல்ல விஷயங்கள்
உள்ளன.

கற்புக்கு உதாரணமாகத் திகழ்பவைக் காகங்கள்.
தனது ஜோடியுடன் மட்டுமே இணைசேரும்.
கூச்ச சுபாவம் கொண்டது காகம்.

மாலைநேரத்தில் நீர்நிலைகளில் குளித்துவிட்டுத்தான்
தன் கூட்டுக்குச் செல்லும்.

உணவை ஒருபோதும் தான் மட்டுமே உண்ணவேண்டும்
என்கிற மனோபாவம் கிடையாத. தனக்கு கிடைக்கும்
உணவை தன் சக காகங்களைக் கரைந்து அழைத்து
அவற்றோடு சேர்ந்தே உண்ணும்.

தன் முட்டை இல்லையெனத் தெரிந்தும் குயிலின்
முட்டைகளை அடைகாக்கும். குயில் குஞ்சுகளுக்கும்
தன் குஞ்சுகளைப்போலவே பறக்கும்வரை இரையளித்துப்
பராமரிக்கும்.

ஒரு காகம் இறந்துவிட்டால் அனைத்துக் காகங்களும்
ஒன்றுகூடிக் கரையும். மனிதர்களைப்போல இது இறுதி
அஞ்சலி செய்யும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

நம் வீட்டுக்கு உறவினர் வருகையை முன்கூட்டியே
உணர்த்தும். நம் வீட்டருகே வந்து பலமுறை கா…கா…
என்று கரைவது உறவினர் வருகையை உணர்த்தத்தான்.

கழிவுப் பொருட்களையும் வீணான உணவுப் பொருட்களையும்
உண்டு சுற்றுச்சூழல் நண்பனாகக் காகம் விளங்குகிறது.

ஜொஷா என்ற அறிவியல் அறிஞர் காகங்களைக் குப்பைகளைப்
பொறுக்க வைக்கப் பழக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
குப்பைகளைப் பொறுக்கி எந்திரத்தில் போடும் காகங்களுக்கு
விருப்பமான உணவைத் தரலாம் என்கிறார்.

பெண்கள் பேன் பார்ப்பதுபோல காகங்களும் சக காகங்களுக்கு
அலகால் பேன் பார்க்கின்றன.

ஒரு மனிதனையும் வேறோரு மனிதனையும் தனித்தனியே
அடையாளம் கண்டுகொள்ளும் நுண்ணறிவு கொண்டவை காகங்கள்.

காகம் கற்றுத் தரும் பாடம்

அதிகாலையில் எழுந்திருத்தல், மாலையில் நீராடல். ஒற்றுமையாக
வாழ்தல், கூடிவாழ்தல், உணவைப் பகிர்ந்துண்ணல். எல்லாருடனும்
பாடிப் பேசி மகிழ்.

ஒரு கூட்டத்தில் 10 முதல் 30 காகங்கள்வரை இருக்கும்.
உயரமான கிளைகளில் கூடுகட்டும். 4 முதல் 7 வரை
முட்டையிடும். பெண் காகம் அடைகாக்கும். ஆண் காகம் கூட்டைப்
பாதுகாக்கும்.

அடைகாக்கும் நேரத்தில் ஆண் காகம்தான் உணவு தேடிச்செல்லும்.
குஞ்சு பொரிக்கும்வரைப் பெண் காகம் தண்ணீர்கூட பருகாது. குஞ்சு
பொரித்தபின் சிறகு வளரும்வரைப் பெண் காகமே உணவு சேகரித்து
வந்து உணவூட்டும்.20 வருடங்கள் வரை காகங்கள் வாழும்.

அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

அதாவது, காகம் உணவு கிடைத்தால், அதனை மறைத்து
தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து
உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு
ஏற்படும் என்கிறார்.

மற்றொரு குறளில்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

என்று கூறுகிறார்.

தந்திரமான குணம்கொண்டது காகம். பகல் நேரத்தில்
பெரிய கோட்டானைக்கூட சிறிய காகம் வென்றுவிடும்.
அதுபோல பகைவரை வெல்ல விரும்பும் மனிதன் அதற்கேற்ற
காலத்தைக் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.

காகம் எவ்வளவு புத்திசாலி பாருங்க..

ஜப்பானில் ஒருவகை அண்டக்காகங்கள் உள்ளன. விதைகளை
உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை உண்பதற்கு அவைக்
கையாளும் தந்திரம் என்ன தெரியுமா…?

நகரத்தின் மையப் பகுதியில் வாகனங்கள் வேகமாகச் செல்லும்
வழியிலுள்ள சிக்னல் மீது அமர்ந்துகொண்டு அலகால் உடைக்க
முடியாத விதைகளைக் கீழே போடுகின்றன. வாகனங்களின் சக்கரங்கள்
ஏறி உடைபட்ட விதையினுள்ளிருந்து வெளிப்பட்ட பருப்பை எடுத்து
உண்கின்றன.

பாதசாரிகள் நடந்துசெல்வதற்கான பச்சை விளக்கு எரியத்
தொடங்கிய பின்புதான் பருப்பை எடுக்கச் செல்லுமாம். அதுவரைக்
காத்திருக்குமாம். சிகப்பு விளக்கு எரியும்போது வாகனங்கள் வராது
என்பதையும் அறிந்துவைத்துள்ளன காகங்கள்.

Latest news