விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள Vபுதுாரில் வசித்து வருபவர் கந்தசாமி (51). இவரது மனைவி கனகவள்ளி (42) இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.
கனகவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தினமும் பள்ளிக்கு செல்லும் பொழுதும் பள்ளி முடித்து திரும்பும்போதும் ராஜபாளையம், சத்திரப்பட்டி மேம்பாலத்திற்கு கீழே உள்ள ரயில்வே தண்டவாள பாதையை கடந்து பாலமுடிவில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊரான V புத்தூருக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்த பொழுது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் ஆசிரியை உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரயில் விபத்தில் ஆசிரியை சிக்கி பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
