இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை எஸ்பிஐ தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால் தற்போது, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனி IMPS முறையின் மூலம் பணம் அனுப்பினால், அதற்கான கூடுதல் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் பல வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுவரை ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவதற்கு பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது IMPS பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுவது வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ செயலி ஆகியவற்றின் மூலம் ரூபாய் 5 லட்சம் வரை பணம் அனுப்பும் வசதி பெற்றிருந்தாலும், புதிய விதிகளின்படி குறிப்பிட்ட வரம்பை தாண்டும் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
IMPS பரிவர்த்தனைக்கான சேவை கட்டண விவரம் வருமாறு:
ரூ.25,000 வரை – கட்டணம் இல்லை
ரூ.25,001 முதல் ரூ.1 லட்சம் வரை – ரூ.2 + ஜிஎஸ்டி
ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை – ரூ.6 + ஜிஎஸ்டி
ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை – ரூ.10 + ஜிஎஸ்டி
இந்த சேவை கட்டணங்கள் ஆன்லைன் மூலம் IMPS வழியாக பணம் அனுப்பும் போது மட்டும் பொருந்தும். வங்கிக்குச் நேரடியாக சென்று பணம் அனுப்பினால் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. இதனால் சில வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், தினமும் ரூ.30,000 அல்லது ரூ.40,000 போன்ற தொகைகளை அனுப்பும் சிறு மற்றும் குறு தொழிலாளர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
