Thursday, April 10, 2025

16 ஆம் ஆண்டில் சத்தியம் டிவி : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சத்தியம் தொலைக்காட்சி 16ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் : “தமிழ்ச் செய்தி ஊடக வரலாற்றில் சமரசங்களுக்கு இடமளிக்காமல் செயல்பட்டு வரும் சத்தியம் தொலைக்காட்சி ஏப்ரல் 4-ஆம் தேதி 15 ஆண்டுகளை நிறைவு செய்து 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சத்தியம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டுமின்றி, போட்டியும் நிறைந்திருக்கும் ஊடக உலகில் செய்தித் தொலைக்காட்சியை 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது எளிதல்ல. அதுவே பெரும் சாதனை தான். அதையும் கடந்து நடுநிலை மாறாமல் செய்திகளை வழங்குவது, மக்கள்நலனை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பது, முக்கிய சிக்கல்கள் குறித்து விவாதங்களை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என அனைத்து வகைகளிலும் சத்தியம் தொலைக்காட்சி சிறந்து விளங்குகிறது. இதற்காக சத்தியம் தொலைக்காட்சியை பாராட்டலாம்.

சத்தியம் தொலைக்காட்சியின் சிறப்பாக நான் பார்ப்பது வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் அது அளிக்கும் முக்கியத்துவம் தான். சுற்றுச்சூழலை காப்பதற்காக, பூமியைக் காக்கும் திருவிழா என்ற பெயரில் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாக்கும் இயக்கத்தை பல நல்லெண்ண அமைப்புகளுடன் கைகோர்த்து சத்தியம் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. அதேபோல், உழவர்களையும், உழவையும் காப்பாற்றுவதற்காக, Friday For Farmers என்ற பெயரில், வெள்ளிக்கிழமை தோறும் வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை சத்தியம் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவதும் சிறப்பானது.

அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கும் ஊடகமான சத்தியம் செய்தித் தொலைக்காட்சி இன்னும் பல 16 ஆண்டுகளைக் காணவேண்டும்; மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்; ஊடகம் வாயிலாக தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கூறி, 16-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சத்தியம் செய்தித் தொலைக்காட்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Latest news