உலகையே நடுங்க வைக்கும் ‘சாத்தான் II’! புடின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது ஒரு மிக முக்கியமான மற்றும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் மிக நவீனமான மற்றும் சக்திவாய்ந்த ‘சர்மத்’ (Sarmat) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, இந்த ஆண்டின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக ராணுவத்தில் நிலைநிறுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை “உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை” என்று வர்ணித்துள்ள புடின், இதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்புத் திறன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார். நேட்டோ (NATO) அமைப்பால் ‘சாத்தான் 2’ (Satan-II) என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, தொழில்நுட்ப ரீதியாக ஒரு மிகப்பெரிய மர்மமாகவும் மிரட்டலாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் இமாலயத் தாக்குதல் எல்லைதான்.

சுமார் 35,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எந்தவொரு நாட்டையும் மிகத் துல்லியமாகக் குறிவைக்கக் கூடியது. குறிப்பாக, உலகின் எந்த ஒரு மூலையில் இருக்கும் இலக்கையும் இந்த ஏவுகணையால் தரைமட்டமாக்க முடியும் என்பதுதான் மற்ற நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.

இந்த ‘சாத்தான் 2’ ஏவுகணை ஒரே நேரத்தில் டஜன் கணக்கான அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியது. சுமார் 10 மெட்ரிக் டன் எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இது, அதிநவீன எம்.ஐ.ஆர்.வி (MIRV) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இதன் மூலம், விண்ணில் இருந்து ஒரே ஒரு ஏவுகணை பிரிந்து சென்று, வெவ்வேறு திசைகளில் உள்ள பல நகரங்களைத் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புடின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவின் இந்த அதிரடி நகர்வு வல்லரசு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு பகிரங்க எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் தடுத்து நிறுத்த முடியாத வேகத்தில் பாயும் இந்த சர்மத் ஏவுகணை, உலக அரசியலில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

Latest News