சாம்சங் நிறுவனம், இந்திய சந்தையில் தனது A சீரிஸின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான கேலக்ஸி A07 5ஜியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
வடிவமைப்பைப் பொருத்தவரை, இந்த சாதனத்தின் பின்புற பேனலில் புதிய கிளாஸ் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பாலிமர் (GFRP) பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மெல்லிய வடிவமைப்புடன், முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்களைவிட அதிக வலிமை கொண்டதாக இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 199 கிராம் எடையும், 8.2 மில்லிமீட்டர் தடிமனும் கொண்டுள்ளது. மேலும், IP54 தர சான்றளிக்கப்பட்ட தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி A07 5ஜி ஸ்மார்ட்போன் லைட் வயலட், லைட் க்ரீன் மற்றும் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (6nm) பிராசஸரும், ARM மாலி-G57 MC2 GPU கிராஃபிக்ஸ் யூனிட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெமரி மற்றும் சேமிப்புத் திறனைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 4GB அல்லது 6GB LPDDR4X ரேம் விருப்பங்களுடனும், 128GB இன்டர்னல் மெமரியுடனும் வருகிறது. கூடுதலாக, மைக்ரோ-எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் மெமரியை 1TB வரை விரிவுபடுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில், சாம்சங் கேலக்ஸி A07 5ஜி ஸ்மார்ட்போனின் 4GB ரேம் மற்றும் 128GB மெமரி கொண்ட மாடல் ரூ.15,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், 6GB ரேம் மற்றும் 128GB மெமரி கொண்ட மாடல் ரூ.17,999 என்ற விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
