இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விரைவில் அதிர்ச்சி காத்திருக்கிறது.
பிசிசிஐ வெளியிட இருக்கும் புதிய வருடாந்திர வீரர் ஒப்பந்தப் பட்டியலில், தற்போது ‘ஏ பிளஸ்’ (A+) பிரிவில் உள்ள இந்த இரண்டு வீரர்களும் கீழ்நிலையிலான பிரிவுக்கு மாற்றப்பட உள்ளனர் என்று கூறப்படுகிறது. மறுபுறம், இளம் கேப்டன் சுப்மன் கில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற வாய்ப்பு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒன்றாண்டிற்குள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இப்போது அவர்கள் இந்திய அணிக்காக ஒருநாள் (ODI) போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
பிசிசிஐ விதிகளின்படி, மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடும் வீரர்களுக்கே ‘ஏ பிளஸ்’ ஒப்பந்தம் வழங்கப்படும். எனவே ஒருநாள் (ODI) போட்டியில் மட்டுமே விளையாடி வரும் ரோஹித் மற்றும் கோலியை ‘ஏ பிளஸ்’ பிரிவில் வைத்திருப்பது சரியானது அல்ல என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில், மூன்று வடிவங்களிலும் அதிக போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, அவரை ‘ஏ’ பிரிவில் இருந்து ‘ஏ பிளஸ்’ பிரிவு ஒப்பந்தத்துக்கு உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் (AGM) வரும் டிசம்பர் 22-ம் தேதி இணைய வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரோஹித், கோலி விவகாரம் மட்டுமின்றி, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தம் மற்றும் உள்ளூர் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
