Wednesday, December 17, 2025

5ம் தலைமுறை விமான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அள்ளிக் கொடுக்கும் ரஷ்யா!

இந்தியாவிடம் தற்போது 5ஆம் தலைமுறை போர்விமானங்கள் இல்லை. அத்தகைய விமானங்களை முழுமையாக உருவாக்குவது மிகுந்த செலவு மற்றும் பெரிய தொழில்நுட்ப சவாலாக கருதப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா தனது 5ஆம் தலைமுறை போர் விமானமான SU-57E-யின் முக்கிய தொழில்நுட்பத்தையும் உற்பத்தி உரிமையையும் இந்தியாவுடன் பகிர தயார் என அறிவித்துள்ளது.

உலகளவில் 5ம் தலைமுறை போர் விமானங்களை உடைய நாடுகள் மூன்றே. ஒன்று அமெரிக்கா, இரண்டாவது ரஷ்யா, மூன்றாவது சீனா. ஆரம்பத்தில் ரஷ்யாவுடன் இணைந்து 5ஆம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க இந்தியா திட்டமிட்டது. ஆனால் திட்ட செலவு அதிகமாக உயர்ந்ததால், இந்தியா பின்னர் அந்த கூட்டுத்திட்டத்திலிருந்து விலகியது.

அமெரிக்காவிடம் விமானங்களை வாங்கினால், விமானத்தை மட்டும் வழங்கி, அதன் முழு தொழில்நுட்ப ரகசியத்தை பகிராது. ஆனால் ரஷ்யா, SU-57E பற்றிய முழு தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க முன்வந்திருப்பதுடன், இந்திய மண்ணிலேயே லைசென்ஸ் அடிப்படையில் விமானங்களை தயாரிக்கவும் அனுமதி தருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய சலுகையை எந்த நாடும் எளிதில் வழங்காது என்ற கருத்து வல்லுநர்களிடையே நிலவுகிறது.

அண்மையில் துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் SU-57E காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது அதன் விமான திறனை ரஷ்யா உலக அரங்கில் மீண்டும் நிரூபித்தது. ஆனாலும் இதில் ஒரு முக்கிய தடையாக அமெரிக்கா கருதப்படுகிறது. ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 400% வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கான அழுத்தத்தாலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவையும் குறைத்தது. அதேபோன்று விமானம் தொடர்பான வர்த்தகம் மேற்கொண்டால், இந்தியா மீதான வரித்தடைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சிலர் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங் கூறியதன்படி, அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் சுமார் 40 புதிய போர்விமானங்கள் தேவைப்படுவதால், ரஷ்யாவின் இந்த வாய்ப்பை பரிசீலிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

Related News

Latest News