ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் வங்கிக் கணக்குத் தொடங்கும் புதிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு சராசரி என்பதை ரூ.50,000 ஆக வைத்திருக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்டது.
நகர்ப்புற கிளை வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கு உயர்த்தியது. கிராமப்புற கிளைகளுக்கு ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தியது.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனது முந்தைய அறிவிப்பை திரும்பப் பெற்ற ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம், புதிய மினிமம் பேலன்ஸை அறிவித்துள்ளது. அதன்படி, நகரப் பகுதிகளுக்கு ரூ. 15,000, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ. 7,500 மற்றும் கிராமப் பகுதிகளுக்கு ரூ. 2,500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.