அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்,.என் ரவியை சந்தித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய தினம் கவர்னரை சந்தித்து 2021 முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வழங்கினோம். உரிய ஆதாரம் உள்ளதால் உடனடியாக விசாரணை நடத்தவும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம்.
கடந்த 4½ ஆண்டுகளில் திமுக அரசு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தமிழகத்தை கடனில் ஆழ்த்தியுள்ளது. 56 மாதங்களில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதுவரை ரூ.4 லட்சம் கோடி கடன் அளவு உயர்ந்துள்ளது.
விஞ்ஞான முறையில் திமுக ஊழல் செய்து வருகிறது. துறை வாரியாக நடந்த ஊழல் என்று பார்த்தால், நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.64 ஆயிரம் கோடி, சுரங்கத்துறையில் ரூ.60 ஆயிரம் கோடி, டாஸ்மாக் துறையில் ரூ.50 ஆயிரம் கோடி, பத்திரப்பதிவு துறையில் ரூ.20 ஆயிரம் கோடி, தொழில்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி, வேளாண்மை துறையில் ரூ.5 ஆயிரம் கோடி, விளையாட்டு துறையில் ரூ.500 கோடி, உயர்கல்வித் துறையில் ரூ.1,500 கோடி என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது.
2021-ல் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அன்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் தற்போது பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏன் ரூ.5 ஆயிரம் அறிவிக்கவில்லை. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
ஊழல் செய்துள்ள திமுக அரசுக்கு சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வருகிற தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
