இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, மேலும் 5 கிலோ எடையை குறைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ரோகித் சர்மா தன் உடல் எடையை அதிகரித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோகித் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் 3 போட்டிகளில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னரும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ரோகித், கூடுதலாக 5 கிலோ எடை வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
