Monday, September 8, 2025

ரிதன்யா தற்கொலை வழக்கு; ‘விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை’- ஐகோர்ட்!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்ற ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணயை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழுவுக்கு மாற்றக்கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி இந்த வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், கவினின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் தொடர்பும் உள்ளதால் வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழுவுக்கு மாற்ற வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என கூறினார்.இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என தெரிவித்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டுமென விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட வேண்டுமெனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News